Monday, August 17, 2015


நட்பில்  மலரும்  மனிதநேயம்!

சாதிமத பேதத்தின் சமாதிமீது
சமத்துவமாம்  ரோசாவை  நட்டுவைப்போம்;
வேதியர்க்கும்  விலங்குகட்கும்  உயிரொன்றென்றெ
வித்தியாசமின்றிங்கே  அன்பு  செய்வோம்!
ஏதிலார்தம்  குற்றங்கள்  கண்டிடாமல்
எல்லோரும்  ஒன்றெனவே  உணர்ந்துநிற்போம்!
நாதியிலா  உயிர்க்கெல்லாம்  நன்மை  செய்தால்
நட்பதனில்  மலர்ந்திடுமே  மனிதநேயம்!

பிறந்திட்ட குழந்தைக்குச் சாதியுண்டோ?
பேர்உண்டோ மதமும்தான் உண்டோ நண்பா?
பறக்கின்ற பறவைக்குள்  பேதமுண்டோ?
படைத்திட்டார்  பேதமெல்லாம்  மனிதர்தம்மும்
துறந்திட்ட  வெறுப்புடனே  துவேடம்நீங்கி
தூய்மையுடன்  மனந்தன்னில்  கருணை  ஓங்க
அறத்துடனே  நல்லன்பை  வளர்த்து  விட்டால்
அந்நட்பில்  மலரும்தான்  மனிதநேயம்!

- கே.பி.பத்மநாபன்.
(கீழைநாட்டுக் கவிதைமஞ்சரி நூலிலிருந்து)
====================================================================================================

மண்ணுக்குள்  மனிதநேயம்!

உண்ணமறுக்கும்குழந்தை
ஊட்டமுயலும் தாய்
எதிரிலோ பிச்சைக்காரச் சிறுமி.
"போ!" – அம்மாவின் விரட்டல்!

மண்ணுக்குள்  புதைகிறது
மனிதநேயம்!

பேருந்தில்  நெரிசல்
கைப்பிடியில்  தொங்கும்
கர்ப்பிணிப்  பெண்
இடம்கொடுக்கமாட்டார்களா
என  எங்கும் பார்வை…..

ஊனமுற்றோர்  இருக்கையில்
ஒரு "குடிமகன்"…..

மண்ணுக்குள்புதைகிறது
மனிதநேயம்!

மதத்தின்  பெயரால்
செல்வத்தின்  பெயரால்
மண்ணின்  பெயரால்
மென்மையான  காதலின்
பெயராலும்கூட…….

மண்ணுக்குள்  புதைகிறது
மனிதநேயம்!
சுயநலத்திற்காக!

- கவிஞர்  அம்பல்மாதவி,  தஞ்சாவூர்
தமிழ்நாடு
======================================================================================================================

மனிதநேயமே  என்றும்  பிரதானம்!

புவியொரு  மைதானம்,
இதில்  இன்றும்
நிதிதானம்
நிலைதானம்
கல்விதானம்
கோதானம்
கந்தானம்
அன்னதானம்
மண்தானம்
உதிரதானம்
உடலுறுப்புதானம்…..
எனினும்,
மனிதநேயமே
என்றும்  பிரதானம்!

- கவிதாயினி  வஞ்சி,  நெல்லை,  தமிழ்நாடு
======================================================================================================================

நிலைக்கும் மனிதநேயம்!

மதுவில்  மயங்கி
மாய்ந்து  கொண்டிருக்கும்
உயிர்களை  மீட்க  - தன்
உயிரினை  ஈந்த
சசிபெருமாள்  போன்ற
சரித்திரநாயகர்களின்
தியாகம்  உள்ளவரையிலும்,

விபத்தில்  அடிபட்டு
விபரீத  மூளைச்சாவு  அடைந்த
அன்பு  நெஞ்சத்தின்
உடலுறுப்புகளை  தானம்செய்து,
இன்னொரு  உயிரை  வாழவைக்கும்
இரக்கமுள்ள  நெஞ்சங்கள்  வாழும்  வரையிலும்,
மனிதநேயம்  இம்மண்ணில்
என்றென்றும்
மாண்புடன்  நிலைத்திடுமே!

- கவிதாயினி  வஞ்சி,  நெல்லை, தமிழ்நாடு.
======================================================================================================================

அன்று….
வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம்
வாடிய வள்ளலார்,
முல்லைக்குத் தேர்ஈந்த
வள்ளல்பாரி,
மயிலுக்குப் போர்வைதந்த
மன்னன் பேகன்,
அன்பின் முகவரியான
அன்னை தெரஸா.
தன்னையே தந்த பூமி!

இன்று
பாலியல் பலாத்காரம்,
'பாம் வெடிக்கும் கலாச்சாரம்,
மதுவில் மயங்கி
மகளையேச்  சீரழிக்கும்
மாக்கள்,

முதியோரை  விடுதியே
கதியாய்எண்ணி
விரட்டிடும்  சதிபதிகள்!

எங்கே போனது  மனிதநேயம்?
சங்கு ஊதி  சமாதியானதோ?

- கவிதாயினி  வஞ்சி,  நெல்லை,   தமிழ்நாடு.
===========================================================
===========================================================
மணம்  வீசட்டும்  மனிதநேயம்!

மனிதநேயம்  என்பது  மானிடப்பிறவிக்கு
இனிதே வேண்டிய ஒன்று!

துன்பத்தில் உழல்வோர்க்குத்
துள்ளிக்குதித்துச் செயல்பட்டு
உதவவேண்டும்!

கவலையில் மிதப்போர்க்கு
கனிவோடு ஆறுதல்
கூறவேண்டும்!

மற்றவர்களும்
மனிதர்களே  என்ற
மனவுணர்வு  நமக்குவேண்டும்!

நிதானம்  தவறுவோர்க்கு
நேயமுடன்
நித்தமும்  அறிவுறை  கூறவேண்டும்!

மலரவேண்டும்  மனதில்
மனிதநேயம்  என்றென்றும்!

- கவிதாயினி.  ஜமீலாபேகம்,  உதகை,, தமிழ்நாடு
====================================================================================================================

மனிதநேயம்!

பசியால்  பரிதவித்து  வாடும்
பரம  ஏழைகளுக்கு உதவும்
பண்பு நமக்கு  வேண்டும்!

கண்ணீர்  வடிப்போரைக்  கண்டு
கரையும் மனதினராய் - அவர்
கவலை  போக்கும்
பண்பு நமக்கு வேண்டும்!

வறுமையில் வாடும்  மனிதர்களுக்கு
அவர்களின்  வறுமைதீர
வழிகாட்ட வேண்டும்!

உயிர்போகும் நிலையில்
உள்ளவர்களுக்கு  உதவும்
உத்தமகுணம் வேண்டும்!
எளியோர்க்குத்  தீங்கிழைக்கும்
கொடியவர்களை
எதிர்த்து நின்று போராடுவதில்
கொதித்தெழும்  உணர்வுவேண்டும்!

வீழ்ந்தவன் வீழ்ந்தே கிடக்காமல்
அவன் விழித்தெழ உதவும்
வீரம் வேண்டும்!

இந்தியர்கள்  அனைவருக்கும்
இப்பண்புகள் மலர்ந்தால்,
இன்னொரு  இமயமாக உயரும்
இனிதே மனிதநேயம்!

- கவிஞர்.  மூர்த்திதாசன், தேனி,  தமிழ்நாடு
============================



மனிதநேயம்  கொள்வோம்!
----------------------------------------
போற்றுதலுக்குரிய   தன்னம்பிக்கை,
புரிதலோடு  கூடியவாழ்க்கை,
தேற்றிக்கொள்ளும் மனத்தெளிவு,
தீர்க்கமான குறிக்கோள்கள்,
ஆற்றிவரும் அரியசாதனைகள்,
அத்தனையும் தம்முள்கொண்ட.....
மாற்றுத்திறனாளிகளால்தான் இந்த
மனிதகுலமே வாழ்கிறது!
மனிதநேயம் கொள்வோம்
மாற்றுத்திறனாளி தோழர்கள்மீது!

-         கிரிஜாமணாளன், திருச்சி. (தமிழ்நாடு)
===============================

மனிதம்!



பிறரைப்  பரிகசிக்காமல்  இருப்பதுதான் மனிதனுக்கு அழகு!
அந்த "மனித"த்தன்மை பற்றி, எழுத்தாளர் அமரர் வல்லிக்கண்ணன்  அவர்கள்  குறிப்பிட்டுள்ளதை இங்கே  வாசிக்கலாமே!

"யாதும்ஊரே" - (மார்ச் 2006) இதழில், அவரிடம் புலவர்அரசு  அவர்கள் நிகழ்த்தப்பட்ட நேர்காணலில்  அவர்  குறிப்பிடும் "மனிதம்" இது.)

கேள்வி தி..சி, அவர்களை ஒரு  'தபால்கார்டு  இலக்கியவாதி என்று கிண்டல் செய்பவர்களுக்குத்  தாங்கள் கூறும் பதில் என்ன?

வல்லிக்கண்ணன் பதில்:

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்! ஒரு தபால்கார்டு மூலம் அறிவு விழிப்பையும், சிந்தனைத்தெளிவையும், சமூகப்பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வையும், செயலூக்கத்தையும், உழைக்கும் உற்சாகத்தையும் பரப்பமுடியாவிட்டாலும், அதைப் பரிகசிக்காமல் இருப்பதே  "மனிதம்"  ஆகும்.

(நன்றி:  "யாதும்ஊரே" (மார்ச் 2006) இதழ்)
=====================================
======================================

மனிதநேயம்
============
மறைந்துவரும்  மனிதப்பண்புகளை
மனதிற்கு நினைவூட்டி
தொலைந்து நிற்கும் தூயஎண்ணங்களை
துளிர்க்கச் செய்வதற்காக
மனிதநேயத் திருநாளாய்
மலர்ந்து நிற்கும்
புனித நாளாம் இந்நாளில்
பூரிப்புகொள்வோமாக1

- கிரிஜாமணாளன், திருச்சி
                                    தமிழ்நாடு
=============================

உலக  மனிதநேய  தினம்  - ஆகஸ்ட் 19
==================================
'உலக மனிதநேய தினம்'  (ஆகஸ்ட்  19) கொண்டாடும் இச்சமயத்தில்
நமது தமிழகக் குறுஞ்செய்திக் குடும்பத்தில்  (MOBILE SMS) தமது 
கவியாற்றலைக் காட்டிவரும் என் அன்புக் கவிஞர்களின் கவிதைகளை 
இத்தளத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
                               

- கிரிஜாமணாளன்

====================



===================================

Wednesday, August 12, 2015


உலக இளைஞர்தினம் - 2015 இளைஞர்களின்கரங்களில்தான்இந்நாட்டின்எதிர்காலம்இருக்கிறதுஎன்பதை நன்கு உணர்ந்து, அவர்களுக்கு எழுச்சி யூட்டிய வீரத்துறவி விவேகானந்தரையும், இளைஞர்களைக் கனவுகாண ஊக்குவித்து, தேசநலன் சார்ந்த அவர்களின் எதிர்காலத்தைச் செம்மைப்படுத்த அயராது பாடுபட்ட அமரர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களையும் இந்த 'உலக இளைஞர் தின'த்தில் நினைவுகூர்வோம்! - கிரிஜாமணாளன் ========================== உலக இளைஞர் தினம் ==================== பிறந்தபின் தவழ்ந்து தத்தித் தத்தி நடந்து, மழலைபேசி, உறவுகளை மகிழவைத்தாய்! பயிலும்போது. கற்றவர் சபையில் கைதட்டல் வாங்கி, பாடசாலைக்குப் பெருமை தந்தாய்! நாளை அகிலம் போற்றும் சாதனைபுரிய ஓடிவா இளைஞனே! இந்த உலக இளைஞர் தினத்தில் உறுதியுடன்! - கங்கை கணேசன், மதுரை ========================== மாணவனாய் இருந்தாலும் சாதாரண மனிதனாய் இருந்தாலும் உன்னை உனக்குள் புதைக்கும் மதுவிலும் மாதுவிலும் மயங்கிவிடாதே! மதி மயங்கினால் மனிதமும் மங்கிவிடும்! மண்ணுக்குள் போகும்வரை மண்ணின் மைந்தனாய் எதையுமே சாதிக்க முடியாது! நீ சாதிக்க நினைப்பவனா? சரித்திரம் படைக்க நினைப்பவனா? உலகம் உன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டுமென்ற உந்துதல் கொண்டவனாய் உலக உருண்டையை உன் கண்முன் வைத்து உருளவிட்டுப் பார்! உலகத்தையே கைக்குள் வைத்தவர்கள் உனக்கு முன் வருவார்கள்! அவர்களை அசைபோடு! நீ அவர்களாவாய்! அவர்களில் ஒருவராய் நீ ஆவாய்! - கவி. மூர்த்திதாசன், தேனி, தமிழ்நாடு ============================= எழுவாய் இளைஞனே! வெறுங்கை என்பது மூடத்தனம் - உன் விரல்கள் பத்தும் மூலதனம்! விழி விழி, உன்விழி நெருப்பு விழி! –உன் விழிமுன் சூரியன் சின்னப்பொறி! கிழக்குத் தானாய் வெளுக்காது - அதைக் கிழிக்காவிட்டால் சிவக்காது! விரக்தி என்னும் சிலந்தி வலைக்குள் வேங்கைப் புலி நீ தூங்குவதா? எழு எழு தோழா, உன் எழுச்சி - இனி இயற்கை மடியில் பெரும்புரட்சி! உழைக்க வேண்டிய விரலிடுக்கில் ஒட்டடை படிய விடலாமா? முப்பதைத் தொடுமுன் மூப்புத்தொட - உன் மூச்சில் முதுமை வரலாமா? தப்புகள் வந்து தங்கிட - உன் தசையின் முகவரி தரலாமா? - கவிஞாயிறு தாராபாரதி ============================== உலகமே உமதுதான்! இளைஞர்களே! உம்மால் முடியும்! உணர்ந்து கொள்ளுங்கள்! கொஞ்சம் நிமிர்ந்து நில்லுங்கள்! இவ்வுலகத்தை அழகாய் வெல்லுங்கள்! தோல்வியை எதிர்கொள்ளுங்கள்! நீங்கள் வளரும் நாற்று, அதை இவ்வுலகுக்குக் காட்டுங்கள்! உலகமே உமதுதான் அதைப் புரிந்துகொள்ளுங்கள்! - ஜமீலாபேகம், உதகை, தமிழ்நாடு ================================ இளைஞனே! உன்னை ஈன்ற உத்தம அன்னையாய், தாய் மண்ணைப் போற்றி மனக்கோவிலில் அமர்த்து!
தன்னைக் காக்க தளராது உழைத்த தலைமகன்களின் வரிசையில் உன்னையும் உயர்த்தும் இந்த உத்தம தேசம்! வந்தேமாதரம்! - ஈரோடு எஸ். வளர்மதி ================================= ================================= ================================= எம் இளைஞன்! எண்ணற்ற இரவை விரட்டும் வெளிச்சங்களாய் எம் மண்ணில் ஒளிர்ந்தான் எம் இளைஞன்! பனிகொட்டும் பர்வதத்தில் பாதுகாப்புப் படையில் எம் இளைஞன்! நான்கு சுவர்களுக்குள் நாளைய வாழ்வினை உருவாக்கும் நல்லாசிரியனாய் எம் இளைஞன்! விக்னத்தைப் பிரசவித்த விஞ்ஞானியாய் எம் இளைஞன்! மெய்யானதைப் போதிக்கும் விவேகானந்தராய் எம் இளைஞன்! கோவணம் உடுத்தி கலப்பைப் பிடித்து பசியோட்டுபவனாக எம் இளைஞன்! துவைத்துத் துவைத்து ரேகையைத் தொலைத்த சலவையாளனாய் எம் இளைஞன்! திரியாகக் கருகி திக்கெட்டும் வெளிச்சமாகி தரணியைக் காக்கிறான் எம் இளைஞன்! - பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு. ============================= இளைஞனே! வன்முறையே வேண்டுமென்று விரும்பி நிற்போர் வழி தவறிச் செல்வதுதான் உண்மையாகும்! முன்னோர்கள் இருந்திட்ட கற்காலத்தின் மூடராக நாம் மாறல் உறுதியாகும்! பின்னவர்க்கு நம் வழிகாட்டுதல்தான் பீடுடைய நமக்கின்று பெருமையாகும்! நன்முறையைக் கைக்கொண்டு நாமெல்லோரும் நாட்டிலுள்ளவன் முறையை விரட்டுவோமே! - பாச்சுடர். வளவ. துரையன் (நன்றி: 'தமிழ்த்தாராமதி') ============================== எழுச்சி கொள்க! தியாகம் பல தீட்டி வரையப்பட்ட அழகான ஓவியமாய் 'சுதந்திரதேவி ' நான், கள்வர்கள் கையால் கலையலாமோ இளைஞர்களே? எழுச்சி கொள்ளுங்கள், என்னைக் காப்பாற்ற! - பத்மாவதி கிருஷ்ணசாமி, நன்னிலம் தமிழ்நாடு ============================== நீ இளைஞனா? இளமை இயற்கையின் வரம்! இந்த வரமும் சிலருக்கு மட்டுமே வசந்தங்களை வழங்குகிறது. இளமையின் மதமதப்பில் ஏற்படும் இறுமாப்பில் இலட்சியங்களை அலட்சியப்படுத்தி மாயச் சுகங்களில் மயங்கிக் கிடந்து வருடங்களை உருட்டியபின்….. வருகிறது முதுமை! கூடவே…. வேதனை, விரக்தி, கொஞ்சம் ஞானம். திரும்பி வராத இளமை, வசந்த முல்லையின் வாசம், விரும்பாமல் வரும் முதுமை, கசந்த வாழ்வின் மிச்சம். நீ இளைஞனா? * * * * * வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம். நீ விரும்பாத போதும் ஓடவேண்டிய வினோத பந்தயம்! வெல்வதென்றால் வேகமும் வேண்டும், வீழாதிருக்கும் விழிப்புணர்வும் வேண்டும், விழுகின்ற போதெல்லாம் எழுகின்ற வீம்பும் வேண்டும்! - தங்கவேலு மாரிமுத்து, திருச்சி =========================== இளைய தலைமுறையே! கலையாத கனாக்காணும் இளைய தலைமுறையே! பலியாடாய் மாறாமால் பகைவெல்லப் படைநடத்து! பல்லக்குத் தூக்கியே, பலத்தை இழக்காதே! இதய ஊற்றினிலே எழுச்சி பொங்கினால் இமயச் சிகரங்கள் இருக்கும் உன்மடியில்! புல்லாய் இருந்தால் சிதைப்பார்கள்! பொம்மை என்றாலோ உதைப்பார்கள்! புழுவாய்க் கிடந்தால் மிதிப்பார்கள்! புயலாய்க் கிளம்பு துதிப்பார்கள்! - வல்லம் தாஜுபால் (தஞ்சைதாமு) ============================= இளைஞனே! இளைஞனே! நீ, அனைவரிடமும் அன்பும், நட்பும் சகோதரத்துவமும், நாளும் வளர்த்தால், போற்றப் படுவாய் நீ, புகழோடு இச்சமூகத்தில்! பச்சைத்து ரோகமும், பகைமையும் நீக்க, நிச்சயம் எதிர்காலம் நிலைக்கும் நலமாய் உனக்கு! - புஷ்பவனம், வைரநகர் சிவாஜி, ========================= வீழ்ந்தாலும் வீறுகொண்டு எழு விதையென! தாழ்ந்தாலும் தலைநிமிர்ந்திடு நாணலென! நாளை விடியல் உனதாகும்! - கார்த்திகேயன், வெள்ளக்கோவில். ================================================ எழுவாய் இளந்தமிழா! உன்னை இகழ்ந்தோர் உறக்கம் இழந்துழல இன்னே எழுவாய் இளந்தமிழா - பொன்னாய், ஒளிரும் தமிழின் உரிமை நீ காப்பாய் களிறுபோல் தோன்றிக்களத்து. - புலவர்மு.செல்வராசு, திருச்சி =========================== 2005, நவம்.15,"நற்றமிழ்" இலக்கியத் திங்களிதழிலிருந்து எடுக்கப்பட்ட கவிதைகள்: இளைஞனே! உடுத்தலும் உறங்கலும் உண்ணலுமே எடுத்ததின் பயனென எண்ணாமல் அடுத்தினி அவனியில் வாழ்ந்தோங்கத் தொடுத்திடு புதுப்பணி துவளாமல்! - து.சுப்பராயலு, பெரியகுளம் ============================= இளைஞனே! விதியினைஎதிர்த்துநீபோராட மதியதேதுணையெனஅறிவாயே! மதியுடன்தொடர்ந்துநீமுயன்றாலே விதியதுபுறமுதுகுகிட்டிடுமே! - பா.கல்பனா, பழையகருவாட்சி ============================= இளைஞனே! வெறிக்குணம்தவிர்த்து வெற்றிகாண்பாய்! புறஞ்சொல் அழித்திடு புனிதனாவாய்! நிறைமனம் உயர்த்திடு இனியனாவாய்! அறச்சுமை வளர்த்திடு மனிதனாவாய்! - ப. தேவகுரு, தேவதானப்பட்டி ============================== இளைஞனே! துடிப்புடன் நடப்பதால் துன்பமில்லை! கடிந்திடும் சினம்விட எதிரியில்லை! படி! படி! எழுதிடு பயமில்லை! படிப்படி உயர்வுதான் அதன்எல்லை! - ஆ. முகிலரசி, ஆற்காடு ============================== இளைஞனே! தளர்வுறும் மனத்தினைக் கிளர்த்திடுவாய்! வளர்பிறை எனப் புகழ் வளர்த்திடுவாய்! உளத்தினில் உயர்வையே ஊன்றிடுவாய்! களமெலாம் களிறென வென்றிடுவாய்! - திருமதி கற்பகம், பரதராமி ===============================

Tuesday, August 4, 2015


கண்ணீர் அஞ்சலி. மறைந்த மாமேதை டாக்டர் அப்துல்கலாம் அவர்களது மறைவையொட்டி, நமது தமிழகக் குறுஞ்செய்திக் கவிஞர்களின் அஞ்சலிக் கவிதைகள் இங்கே வெளியிடப்பட்டுள்ளன. எனது கைப்பேசிக்குக் குறுஞ்செய்திக் கவிதைகளாக வந்த இவைகள் சிறிய படைப்புகளாக இருப்பினும், கவிஞர்களது பெரிய மனத்துயரை வெளிப்படுத்தக் கூடியனவாக அமைந்திருப்பது, மாமேதை டாக்டர் கலாம்மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பையும், மரியாதையும் நமக்கு உணர்த்துகிறது. மாமேதை டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் ஆன்மா அமைதியடைய அனைத்துப் படைப்பாளர்கள் சார்பில் எனது கண்ணீர் அஞ்சலி. - கிரிஜாமணாளன். ----------------------------------------
-------------------------------------------------------



புதைக்கப்படவில்லை  நீ
விதைக்கப் பட்டாய்! உன்                            
னவுகள் முளைத்து விருட்சமாகும்       
காலம் வரும்!             
காலமெல்லாம் நிலைத்து நிற்கும்
"கலாம் விருட்சம்"!

      - கிரிஜா மணாளன்
=================================
==================================

விதைத்துச்  சென்றுள்ளார்
கலாம்,           
இளைஞர்கள்  என்னும்  விதை!
முளைத்து நாளை விருட்சமாகும் - உலகம்
முன்நின்று  போற்றும்  அதை!

        - வைரநகர் சிவாஜி, மதுரை.

=================================== 
==================================
  
இந்தியாவின் ஆன்மா நீ!
இளைஞர்களின் கனவு நீ!
ஓயாது உனது காலடித் தடங்கள்!
உறங்காது  உன்  கனவுகள்!

@                            @                            @
                 
எளிமையான அணுகுமுறை
வலிமையான தன்னம்பிக்கை
முழுமையான அறிவாற்றல்,
திறமையான தீர்க்கதரிசி….
டாக்டர் அப்துல்  கலாம்!



 - எஸ். வளர்மதி, ஈரோடு







============================================
மண்ணுலகில்  பிறந்து,
 மகத்தான சாதனைகள் புரிந்து,
விண்ணுலகம் சென்ற  நீ   -  எங்கள்
விழிகள் முன் வழிகாட்டியாய் என்றும்!

 - வி.சென்னப்பன், கீரைப்பட்டி, தர்மபுரி

=====================================
======================================

இந்தியத் தலைநகரின் 
ணையிலா மாளிகையில் 
முதலாம் குடிமகனாகக் 
குடியேறியவனே!    
இந்தியர் அனைவரின் 
இதயச் சிம்மாசனத்திலும் 
என்றென்றும் வீற்றிருக்கும்
 தகுதியும் தன்மையும்உன் 
ஒருவனுக்கே சொந்தம்
அப்துல் கலாமென்னும் 
அன்புள்ளத்துக்கு 
இந்த நாடே சொந்தம்!

         கிரிஜா மணாளன்

======================


======================


Monday, August 3, 2015



டாக்டர் அப்துல் கலாமின் சிந்தனைகள். ========= கவிதைகள் ========= தாய்மண்ணின் பெருமையினைத் தரணியெங்கும் தழைக்கச் செய்த தயாளன் அப்துல்கலாமைத் தாளாத நன்றியோடு தாய்மண்ணே தழுவி அரவணைத்த நாள்….. 30.07.2015 ! - கிரிஜாமணாளன், திருச்சி. ========================= மேதை ஆ'கலாம்' என பாதை காட்டிய 'கலாம்' அய்யா எங்களை விட்டு எப்படிப் பிரிந்து போ'கலாம்'? இந்தியா வல்லரசு ஆ'கலாம்', எனும், உங்கள் கனவு நாளை பலிக் 'கலாம்'! - கவிஞர் வீ. உதயகுமாரன், வீரன்வயல். =================================================== மண்ணில் மறைந்து விண்ணிற்குச் சென்றாலும்கூட நிரந்தரமாய் நம் இதயங்களில் என்றும் வாழ்வார் மனிததெய்வம், மாமேதை அப்துல்கலாம்! - முத்துஆனந்த், வேலூர் ==================================================== கனவு காணும்படி சொன்னீர்கள் கடைசியில் உங்களைக் கனவில் மட்டுமே நாங்கள் காணும்படி செய்துவிட்டீர்களே! மனிதக்கடவுளே! உங்கள் மலர்ந்தமுகம் மறையாது எங்கள் மனதைவிட்டு! - முத்துஆனந்த், வேலூர் ======================================================== இந்தியாவின் ஆன்மா நீ! இளைஞர்களின் கனவு நீ! ஓயாது உனது காலடித்தடங்கள்! உறங்காது உன் கனவுகள்! @ @ @ எளிமையான அணுகுமுறை வலிமையான தன்னம்பிக்கை முழுமையான அறிவாற்றல், திறமையான தீர்க்கதரிசி…. டாக்டர் அப்துல்கலாம்! - எஸ்.வளர்மதி, ஈரோடு ======================================================= அக்னிச் சிறகுகளை உதிர்த்துவிட்டு கண்களை மூடியதோ கனவுப் பறவை? ************************ மரணம்கூட மகுடம் சூட்டியது மாணவர்கள் மத்தியில் மகத்தான ஆசான் அப்துல்கலாமுக்கு! - கவிதாயினி மும்தாஜ்பேகம், திருச்சி. ======================================================= அல்லாவின் சக்தியை நம்பியவர்! அணுசக்தியை விரும்பியவர்! ராமேஸ்வரத்தில் உதித்த பிரம்மச்சாரி! ராக்கெட் விஞ்ஞானத்தில் சூத்திரதாரி! மாணவர்களின் அன்புநண்பன்! மாண்புமிகு முதற்குடிமகன்! கனவுகாணச் சொன்னவர்! - இப்போது கனவாகிச் சென்றவர்! காலமெல்லாம் நிலைத்திருக்கும் கலாம் அவரின் புகழ்! -கவிதாயினி 'வஞ்சி', நெல்லை. ======================================================== குடிசை வீட்டில் பிறந்தாய், குடியரசுதலைவராய் மலர்ந்தாய்! பன்முகங்களைக் கொண்டு பாரதமக்களின் மனங்களில் நின்றாய்! கனவுகாணுங்கள் என்று சொன்னாய், இன்று கானல்நீராக மறைந்தது ஏனோ? - வி.சென்னப்பன், கீரைப்பட்டி (தர்மபுரி) -===================================================== ஏவுகணை விட்டு எவெரெஸ்ட்டைத் தொட்டவனே! இளைஞர் உள்ளமெல்லாம் எழுச்சி தீபமேற்றி, பாரதத்தை, உலகமே பார்க்கச் செய்தவனே! வல்லரசாகும் இந்தியா, வரும் 2020ல்! என்று, சபதம் ஏற்கின்றோம் - எங்கள் சாதனை நாயகரே! - மு.குமரன், பண்ணாந்தூர் ========================================================- மண்ணுலகில் பிறந்து, மகத்தான சாதனைகள் புரிந்து, விண்ணுலகம் சென்ற நீ - எங்கள் விழிகள்முன் வழிகாட்டியாய் என்றும்! - வி.சென்னப்பன், கீரைப்பட்டி, தர்மபுரி ======================================================== விதைத்துச் சென்றுள்ளார் கலாம், இளைஞர்கள் என்னும் விதை! முளைத்து நாளை விருட்சமாகும் - உலகம் முன்நின்று போற்றும் அதை! - வைரநகர் சிவாஜி, மதுரை. ======================================================== ஒரேவானம், ஒரேபூமி, வாழ்ந்தாலும், மறைந்தாலும் பாரதத்தின் ஒப்பற்ற ஒரே தலைவர் உத்தமர் அப்துல்கலாம்! அவருக்கே என்றென்றும் நமது சலாம்! - ஏ.எம்.முபாரக், கல்லுப்பட்டி (தேனி) ======================================================= விண்ணைப்பற்றிப் படித்தவர் - தாய் மண்ணைப்பற்றிப் படிக்கச் சென்றாரோ? கலாமுக்குச் சலாம் போடலாமே! அவர் சாதனைகளைச் சரித்திரம் சொல்லும்! கனவைக் காணச் சொன்னவர், காவியம் பாடவைத்துவிட்டாரே! விண்ணைத் தொடச் சென்றவரே! விண்மீனாய்க் காட்சி தருவீரோ? காற்றோடு கலந்து எமக்குக் கண்ணீர் வடியவைத்தாரோ!===================== - ஜமீலா பேகம், உதகை====== =======================================================
இறங்கிவிட்டார் மேகாலயாவின் மேகக் கூட்டங்களில்! மின்னலாய் மறைந்த அப்துல் கலாம்! இந்திய மக்களின் ஈரவிழிகளில் என்றும் உலராது சோகக் கண்ணீர்! - கவிஞர் புதுயுகம்
புதைக்கப்படவில்லை நீ, விதைக்கப்பட்டாய்! உன் கனவுகள் முளைத்து/ விருட்சமாகும்/ காலம் வரும்! 'கலாம் விருட்சம்'/ காலமெல்லாம்/ நிலைத்து நிற்கும்! - கிரிஜாமணாளன் ========================= பிழைப்பதற்கே அரசியலைப் பேணித் தழுவி நிற்கும், பெரியமனிதர்களை விட்டுவிட்டு, நாடு தழைப்பதற்குத் தன் பணியை தளராமல் ஆற்றிய தயாளரை அழைத்துக்கொள்ள உனக்கு அவசரமென்ன ஆண்டவா? - கிரிஜாமணாளன், திருச்சி

Tuesday, October 16, 2012


அன்புடையீர், வணக்கம். அக்டோபர் 14, 2012 ல் நிகழவிருந்த நமது 'குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்பச் சந்திப்பு மற்றும் மூன்றாம் ஆண்டு நிறைவுவிழா, ஆசிரியர் தகுதித் தேர்வுகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிகழவிருக்கும் விழாவின் தேதி விரைவில் அறிவிக்கப்படும். அன்புடன், கிரிஜா மணாளன் திருச்சி.

Thursday, April 19, 2012

வாழ்த்துகிறோம்!

வணக்கம்!

நமது அன்பிற்கினிய நண்பர், புதுச்சேரி கவிஞர் திரு. குறிஞ்சி மைந்தன் அவர்கள் தனது அடுத்த இலக்கிய ஆய்விற்காக, நமது ' அலைபேசி இலக்கியம்' என்னும் தலைப்பை எடுத்துக்கொண்டுள்ளார் என்ற செய்தி அறிந்து மகிழ்வெய்துகிறோம். ஏற்கனவே தம் இலக்கியப் பணிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள நண்பர் இவ்வாய்வினையும் சிறப்புற முடித்து, மேன்மேலும் விருதுகள் பெற்று திகழ நமது தமிழ்நாட்டு குறுஞ்செய்திக் கவிஞர்கள் மற்றும் இதழாளர்கள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரது தொடர்பு எண்:09566689083

- கிரிஜா மணாளன்
திருச்சி