Tuesday, August 23, 2016

Saturday, August 20, 2016


Monday, July 25, 2016

மனித தெய்வம்  ,பி,ஜே, அப்துல்கலாம் எடுத்த
11 அவதாரங்கள்!

1.      மனிதகுலத்தின்மேல் பேரன்பு காட்டி,சீராட்டி வளர்த்த தெய்வத்தாய்!
2.      நாட்டுமக்களுக்கு இறுதிமூச்சுவரை தன் கடமைகளைச் செய்த, கடமை தவறாத        தந்தை!
3.      இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படை தேவை கல்விதான் என்பதை         உணர்ந்து, பறந்து பறந்து, பாடம் புகட்டிய நிலையிலேயே, இன்னுயிர் நீத்த ஆசான்!
4.      நாட்டு மக்களின் உயிர்காக்கப் போராடிய முப்படைகளின் வீரத்தளபதி!
5.      நாடு மற்றும் உலகமுன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான அறிவியல் முன்னேறத்     திற்காக அல்லும் பகலும் அயராது உழைத்த விஞ்ஞானி!
6.      ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனுக்காக அரும்பாடுபட்ட தர்மசிந்தனையாளன்!
7.      நோய்வாய்ப்பட்டோர்  மற்றும்  உடல் ஊனமுற்றோர் நலம்பேண அரிய மருத்துவக்        கண்டுபிடிப்புகளைத் தந்த  மருத்துவர்!
8.      கடின  உழைப்புதான்  முன்னேற்றத்திற்கு ஒரேவழி என்பதை உலகுக்கு உணர்த்திய   உன்னத உழைப்பாளி!
9.      இந்தியாவை 2020ல் வல்லரசாக்கியே தீருவேன் என்று ஒவ்வொரு இந்தியனையும்      சபதமேற்கத் தூண்டிய போராளி!
10.     அரசியல் கொள்கைகள், வேறுபாடுகள், ஏழை - பணக்காரன், படித்தவர் - படிக்காதவர்  போன்ற பாகுபாடுகள் பார்க்காமல், இறுதிமூச்சு வரை  பறந்து      பறந்து மக்களிடையே  தன் உன்னத கருத்துக்களைப்  பரப்பிய  சுதந்திரப் பறவை!
11.     50 ஆண்டுகளாகியும் பலரால் சாதிக்க முடியாததை, 3 ஆண்டுகள் பதவிக்காலத்தில்     சாதித்துக்காட்டிய, இந்திய மக்கள் அனைவரையும் இலட்சியக்கனவு காணவைத்த   சாதனையாளன்!    
 (நன்றி : பேராசிரியர்  ஆர்.ரெங்கராஜன், திருச்சி)
பதிவு : - கிரிஜா மணாளன்Thursday, July 7, 2016

கேள்விகள்!
=============

தோண்டாமல் வைரங்கள் கிடைப்ப தில்லை!
தூண்டாமல் தீபங்கள் எரிவ தில்லை!
தாண்டாமல் தூரங்கள் குறைவ தில்லை!
தானாக மாற்றங்கள் வருவ தில்லை!

ஆண்டாண்டு காலங்கள் மனித வாழ்வில்
அற்புதங்கள் நிகழ்த்தியது கேள்வி யாகும்!
பாண்டியனை வீழவைத்து மதுரையில் தீ
பரப்பியது கண்ணகியின் கேள்வி யாகும்!

ஆச்சரியக் குறிகளெல்லாம் அணி வகுக்க
அடிப்படையே வினாக்குறிதான்! முன்னேற்றத்தின்
மூச்சாக இருப்பதும் அடிமைகள் கூன்
முதுகுகளை நிமிர்த்துவதும் கேள்வி யால்தான்!

குருட்டுவிழி ஒலிபெறவே பாதை காட்டி
குழப்பங்கள் தெளிவாக்கும் கேள்விகள் தாம்
இருட்டுமென விடிவெள்ளி; ஞானத்தூண்டில்!
இவையின்றேல் அடைபடுவோம் மௌனக் கூண்டில்!


- கவிஞர் வல்லம் தாஜுபால் (தஞ்சை தாமு)


Wednesday, June 22, 2016

தஞ்சை மண்ணில், ஒரத்தநாட்டில் பிறந்த கவிஞர் புகாரி அவர்கள் எனது நீண்டகால நண்பர். அரபு நாட்டில் பணியாற்றி, தற்போது கனடாவில் கணினி வல்லுநராகப் பணி. 'அன்புடன்' என்னும் புகழ்பெற்ற இணைய தளத்தை நடத்திவரும் இவரால் இணையதள படைப்பாளராக உருவாகிய எண்ணற்ற படைப்பாளர்களில் நானும் ஒருவன்.
            'வெளிச்ச அழைப்புகள்', 'அன்புடன் இதயம்', சரணமென்றேன்','பச்சை மிளகாய் இளவரசி' மற்றும் 'காதலிக்கிறேன் உன்னை எப்போதும்...' ஆகியவை இவரது கவிதைத் தொகுதிகள்.
            தன் புதிய நூலை வெளியிடும்போது அதை தமிழகத்திற்கு வந்து வெளியிடும் வழக்கத்தைக் கொண்டுள்ள இவரின் தாய்நாட்டுப் பற்றை போற்றாதவரே இல்லை!
            நான் செயலாளராக உள்ள எங்கள் 'உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக் கிளையின் சார்பில் இவருக்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் எண்ணற்ற இணையதள படைப்பாளர் தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தது எங்களால் மறக்கவியலாது!

- கிரிஜா மணாளன்       

கண்ணீரில்  விழுந்த  இதயம்!

நெஞ்சு நிறைய
கண்ணீரைக் கொட்டிவிட்டுச்
சென்றுவிட்டாய்!
மூச்சுவிட முடியாமல்
மூழ்கிக் கிடக்கிறது  இதயம்.

நீரில் விழும் எல்லாமும்
எடை இழக்கும் என்பார்கள்
உன் கண்ணீரில் விழுந்த
என் இதயம் மட்டுமே
கனமாய்க் கனக்கிறது!
==============================================
நீயே என் காதலி!

உன்
உள்ளத்தைத் தொடவரும்
ஒவ்வொரு  முறையுமே
உன்
பாதங்களைத்  தொடமுடியாத
பாவப்பட்ட அலைகளாய்
நான் திருப்பி  அனுப்பப்படுகிறேன்
எனினும்
என் காதலை  நிராகரிக்கும்
நீயே என் காதலி!
=============================================
- கவிஞர்  புகாரி, கனடா
('காதலிக்கிறேன் உன்னை எப்போதும்...' தொகுப்பில்)