Friday, September 4, 2015
தமிழகத்திலுள்ள  குறுஞ்செய்தி  ஊடகக்கவிஞர்களை  ஒருங்கிணைத்து, ஓர் சந்திப்பு விழா நடத்தவேண்டுமென்ற என் குறிக்கோளின்படி, செய்யாறு நண்பர் இராஜிவ்காந்தியின் ஆதரவுடன் நாங்கள் திருச்சியில் செப்.13, 2009 அன்று நிகழ்த்திய விழாவிற்கு, நண்பர் அமரர் கவிஞர்  . கௌதமன் எங்களுக்கு அளித்த பேராதரவு மறக்கவியலாது.
                சென்னையிலிருந்து குறுஞ்செய்தி ஊடகத்தின் முதல் படைப்பாளர் நண்பர்  கன்னிக்கோவில் ராஜா அவர்களையும், அவரது நண்பர்களையும் வரவழைத்து, விழாவைச் சிறப்பித்த பெருமை, நண்பர் .கௌதமனையேச் சாரும்.
                தொடர்ந்து, சேலம் மாநகரில் அக்டோபர் 9, 2011 அன்று கவிதாயினி திருமதி சுமதி அவர்கள் ஏற்பாடு செய்த குறுஞ்செய்திக் கவிஞர்களின் சந்திப்பிலும் கலந்துகொண்டு சிறப்பித்து, இளங் கவிஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த கவிஞர் . கௌதமன் அவர்களுக்கு அனைவரும் நன்றியுடையவர்களாவோம்.

- கிரிஜா  மணாளன்

 
 சேலம்விழா  மேடையில்  திரு. கவிஞர்  கௌதமன்.
கவிஞர்  வழிநடப்போம்!
==========================
உரத்த  சிந்தனையே
உயிர்மூச்சாம்  அவருக்கு!
மறுத்துப் பேசாத
மாண்புகொண்ட பண்பாளர்!
சிரித்த முகத்தோடு
சிந்தனையில் தெளிவுடையார்!
நாளும் தொடர்பினிலே
நம்மோடு இருந்தவர்!
ஹைக்கூக்  கதறுவது
காதில் ஒலிக்கிறது!
கையறு நிலைதனில்
களையிழந்து நிற்கின்றோம்!
கண்ணீரைத்  துடைத்து - அந்தக்
கவிஞனுக்கு  அஞ்சலி செய்வோம்!

- மழபாடி ராஜாராம், திருச்சி.

==========================


கைக்குள்  வானம்போல்
ஹைக்குகளுக்கு  வாசம்தந்த
நேசமிகு  படைப்பாளி
கௌதமன்!

- வீ.  உதயகுமாரன், வீரன்வயல், தமிழ்நாடு
=====================================
கவிதையாகக்  காத்திருக்கிறது
வார்த்தைகள்
மீண்டும்  வருவாயோ  பிறந்து?

- . கார்த்திகேயன், வெள்ளக்கோவில், தமிழ்நாடு.
======================================

அழவைத்துச் சென்றாரே
அழகுக் கவிதைகளுக்குச் சொந்தக்காரர்!
தொழவைத்துப் பிரிந்தாரே
தோழமையையும் உறவையும்!
பழகுதற்கு இனியவராயும்
பாசத்தின் பிறப்பிடமாயும்
அமைதியின்  உருவாகவாழ்ந்து

அவ்வுலகம்  சென்றவரை

அகத்தில்  நிறுத்திவைத்தே

அஞ்சலி  செலுத்திடுவோம்!

- ஜமீலாபேகம்.  உதகமண்டலம், தமிழ்நாடு
=====================================Wednesday, September 2, 2015நமது  அன்புத்தோழரும், பிரபலகவிஞரும்,  திருச்சி  மாவட்டத் திலுள்ள  பலபடைப்பாளர்  அமைப்புகளில்  உறுப்பினராக  இருந்தவரும்,   'உரத்தசிந்தனைஇதழின்  வளர்ச்சிக்காக  தன்னை  அர்ப்பணித்து, திருச்சிமாவட்டத்திலும்அண்மையில்  சென்னை மடிப்பாக்கத்திலும் வாசகர்வட்டங்களை நிறுவி, 'உரத்தசிந்தனை'யின் புகழை ஓங்கச் செய்தவருமானஇனியநண்பர்கௌதமன்  அவர்கள்,  29.08. 2015அன்று, சென்னை மடிப்பாக்கத்தில் இயற்கை எய்திய சோகச்செய்தியை அறிவித்துக் கண்ணீர்அஞ்சலி செலுத்துகிறேன்அன்னாரின் ஆன்மா அமைதிபெற நமது படைப் பாளத் தோழர்களின் சார்பில் எனது பிரார்த்தனைகள்.
                
           உங்களை  நினைவுபடுத்தும்  சிறு சிறு  நினைவுகளும்,
           எங்களை  வழிநடத்தும்!

கிரிஜாமணாளன்
Email; girijamanaalanhumour@gmail.com
-==========================================================

நட்பின் சிகரம் கௌதமன்!
இருந்தும் வாழ்ந்தார்,
இறந்தும் வாழ்வார்!
எங்கள்
இதயங்கள் அனைத்திலும்!

                        - உதயம்ராம்,
ஆசிரியர், 'உரத்தசிந்தனை', சென்னை.
மின்னஞ்சல்:
==================================
உன்னைமறவோம்!
=======================
உரத்தசிந்தனையின்  வளர்ச்சிக்கு
உள்ளார்ந்த பணியாற்றி
தரத்தினில் மிக்கதோர்
தன்னார்வத் தொண்டாற்றி
வரத்தினால் பெற்றகவி
வல்லமையால் புகழ்பெற்ற
கரத்திற்கு உரிமையாளன்
கௌதமனே! உன்னை மறவோம்!- கிரிஜாமணாளன், திருச்சி.
மின்னஞ்சல்:girijamanaalanhumour@gmail.com
================================================

தனிமையில்   அழுகிறேன்….
==========================
திரைகடலில் உன்தோணி
கரைசேரும் முன்னாலே
கவிழ்த்த அலைகளை வெறுக்கிறேன் -
இதைக்
கறுப்புதினமெனக்  குறிக்கிறேன்.

கனவுகள் முடியுமுன்
இமைகளை  வெட்டிய
காலக்கரங்களைச்  சபிக்கிறேன்  -
மனக்
காயம்  ஆறாமல்  தவிக்கிறேன்.

தோப்பிலே  ஒரு குயில்
பூப்படைந்து  வருகையில்
அறுத்தது  யாரதன்  குரல்வளையை?
அட
அணைத்தது  ஏனந்த  வளர்பிறையை?

கவிதைக்  கிடங்கெனத்  திரிந்தாயே!
ஓர்
இறுதிச்  சடங்கிலே  பிரிந்தாயே!

சிகரத்தைச்  சேருமுன்
மகுடத்தைச்  சூடுமுன்
இடையிலே  எழுந்தது  அபஸ்வரமோ?
பாவி
எமனுக்கு  ஏனிந்த  அவசரமோ?
   
இரங்கற்பா  வாசிக்க
இதயத்தில்  வலுவில்லை
எரிந்தது  தீயில்  உன்தேகம் - அது
எழுத்திலே  அடங்காத சோகம்!

கொட்டும்  கண்ணீரால்
குழைத்த  குங்குமத்தால்
உனது  புகைப்படத்தில்
பொட்டு  வைக்கிறேன்  -  அதில்
மலரும்  நினைவுகளை
விட்டு  வைக்கிறேன்!

நினையாத  நாளொன்று
தனியாக  உண்டென்றால்
நினைவுநாள் கொண்டாட  வருகிறேன்  -
விடு,
தனியாக  அதுவரை  அழுகிறேன்!

 


- கவிஞர்   வல்லம்தாஜுபால்  (தஞ்சைதாமு)
மின்னஞ்சல்:  thanjaidhamu@yahoo.com
==========================

உன்நினைவு!
==========
நட்புக்கு ஓர்  இலக்கணம்,
நம்மைக்   கவரும்  நற்குணம்!
நற்கவித்  திறனோடு
நாளும்  இலக்கியத்  தொண்டாற்றி
கற்பதிலும்  ஆர்வங்கொண்ட
கவிஞராம்  கௌதமனே!
நிற்கும்  உன்நினைவு  -  எங்கள்
நெஞ்சில்  உயிர்  உள்ளவரை!

 
 - ஆர்.  அப்துல்சலாம்,  திருச்சி
மின்னஞ்சல்: ras_salamtry@yahoo.co.in
===================================
  
உன்   கனவுகளை   நனவாக்குவோம்!

 உரத்த  சிந்தனையின்  ஒப்பற்ற  தலைவனே!
உன்னத  உழைப்பின்  சிகரமே !
உழைத்ததெல்லாம் போதுமென்று


உலகினை  நீத்தாயோ?

ஐயகோ, ஆறுதல்  சொல்ல  இனிய சகோதரன்
போயகன்ற  துக்கத்தை  யாரிடம் சொல்வேன் ?

கூட்டங்களின்  எண்ணிக்கையில்
நாட்டமில்லை  உனக்கு
கொள்கைப்  பிடிப்பில்  மட்டுமே  உண்டு!

இனிய வாழ்வின் எல்லா நேரங்களையும்
இலக்கியத்திற்கு மட்டுமே ஒதுக்கினாய்.
உற்சாகப்படுத்துவாய் எவரையும் வார்த்தைகளால்.

பிரிவினை பேதமின்றி பலரையும்  அனுசரிக்க
 
பாடம் கற்க வேண்டும் நாங்கள் உன்னிடம்
பொங்கிவரும்   துயரம் தணிக்க எங்கு செல்வோம் இனி?

உடல் உபாதைகளை பொருட்டென கொள்ளாமல்
ஓடி ஓடி உழைத்த உத்தமனே !
இனிய   புன்முறுவலை எப்போதும் தவழவிடும்
எனதருமைச்   சகோதரனே  எமக்கு வழிகாட்டு!

நீ வகுத்த  பாதையில்  உரத்த சிந்தனையோடு
ஒன்றியே இருப்போம்உனது நினைவுகளோடு.
உன் கனவுகளை நனவாக்குவோம்! 
துயரில் வாடும் இனிய சகோதரி 
 -
தனலெட்சுமி பாஸ்கரன் திருச்சி
======================================

இலக்கியப்பணியில்
இணையிலா  ஆர்வங்கொண்டு
துலக்கிய  கவிதைப்  பணி
தொடர்ந்தது  உன்வாழ்வில்!

உரத்தசிந்தனை  இதழ்தன்னை
உயரிய  இடத்தில்  வைக்க
பொருத்தமான  உன்பணியை
போற்றாதார்  யாருளர்?

வாசகர்  வட்டத்தில்
வகைவகையான  வாசகர்களை - உன்
நேசமிகு  நெஞ்சத்தால்
நிறையபேர்  இணையச்செய்தீர்!

தோழர்கள்  எங்களை  இங்கே
துடித்து  அழவைத்துவிட்டு
பாழும்  யமன்  உன்னை
பரலோகம்  இட்டுச்  சென்றானே!

- வை.  தியாகராஜன், திருச்சி, தமிழ்நாடு
================================
சிரித்துச்  சிரித்துப்  பேசிவந்தாய்!
சிவந்த முகம் கொண்டாய்!
சிறப்பான கவிதைகளை  எங்கள்
சிந்தைக்கு  விருந்தாய்
நீ தந்தாய்!

படைப்புலகம்  இழந்தது
உன்னை!
பாரோ  தவிக்கின்றது
உண்மை!

இலக்கிய  உலகில்
நீயும்  முன்னோடி!
நித்தம்  நாங்கள்  பார்க்கும்
காலக்  கண்ணாடி!

ஆறாத்  துயருற்றேன்!
அழுது  புலம்புகின்றேன்!
அருந்தமிழேஉன்பிரிவால்
வாடி  வதங்குகின்றேன்!
  
 


கண்ணீருடன்…….
- கவிஞர்சோலச்சி, புதுக்கோட்டை
மின்னஞ்சல்: solachysolachy@gmail.com
===========================
கவி மலர்!

அதிர்ந்துபேசாதநற்குணம்!
அடக்கத்தில்சற்குணம்!
உதிர்ந்துபோனாயேகவிமலரே
உலகைத்துறந்து!
உள்ளம்வேகுதே
உன்னைநினைந்து!
   
 


- எஸ்.  வளர்மதி, ஈரோடு
மின்னஞ்சல்: erovalarmathisakthi@gmail.com
================================================================
மகாகவி  பாரதியாரின்மீது  ஆழ்ந்த  பற்றுவைத்து, அவரது  கவிகளை  வாசிப்பதிலும், அவரைப்  பற்றி தனது கவிகளில்  புகழ்வதையும்  வழக்கமாகக்  கொண்டிருந்த  நண்பர்  கவிஞர்  அ. கௌதமன்பாரதியாரின்   126 வது  பிறந்தநாளின்போது, திருச்சி ' அக்னிக்குஞ்சுவாச கர்வட்டம்  சார்பாகநான்  தயாரித்து வெளியிட்ட  கையேட்டில்  அவர்  எழுதிய கவிதை  இது.

மீண்டும்  வா!

  


       
பாரதிரப் பாப்புனைந்து   பாரதத்தில்
பாரதத்தைப்  பாங்காய்ஓட்டியவன்!
பைந்தமிழர்  வாழ்வினைத்  தழைக்கச்செய்து
விடுதலைக்கு  அடிக்கல்  நாட்டியவன்!

நற்கனக்   லிங்கத்துக்குப்  பூணூலேற்றி
நால்வருணச்  சாதிகளைச்  சாடியவன்1
வேற்றுமைகள்  ஒழிந்திடப்  போராடும்
வெஞ்சினக்  கவிதைகள்  சூடியவன்!

விடுதலை  வேட்கையே  அவன்  மூச்சு!
வீரத்தில்  ஊறியது  அவன்பேச்சு!
அனல்வீசும்  கவிதைகளை  உதிர்த்தவன்!
ஆதிக்க  வர்க்கத்தை  தகர்த்தவன்!

குயிற்பாட்டில்  அவன்  தந்தது  காதலின்பம்,
குலவிடும்  இதயமெல்லாம்  பேரின்பம்!
விடுதலைப்  பாடல்களில்  வீரக்கனல்!
வீசிடும்  அவனது  கோபக்கனல்!

நமனுக்கு  ஏனிந்த  அவசரமோ?
நாற்பது  அகவைக்குள்  உனைஅழைத்தான்!
நமனைவிடக்  கொடியவரின்  பிடியில் நாங்கள்
நல்லுரிமை  பெற்றுயர  மீண்டும்  வா!
  
 - கவிஞர்   அ. கௌதமன்
  (தி.மா..சங்கசெய்திமலர் - டிசம்.11. 2007)

 ===================================

தமிழகத்திலுள்ள    குறுஞ்செய்தி  ஊடகக்கவிஞர்களை  ஒருங்கிணைத்து, ஓர்  சந்திப்பு  விழா  நடத்தவேண்டுமென்ற  என்  குறிக்கோளின்படி, செய்யாறு  நண்பர்  இராஜிவ்காந்தியின்  ஆதரவுடன்  நாங்கள்  திருச்சியில்  செப்.13, 2009  அன்று  நிகழ்த்திய  விழாவிற்கு, நண்பர்  அமரர்  கவிஞர்  அ. கௌதமன்  எங்களுக்கு அளித்த  பேராதரவு  மறக்கவியலாது.
                சென்னையிலிருந்து  குறுஞ்செய்தி ஊடகத்தின் முதல்படைப்பாளர் நண்பர்  கன்னிக்கோவில்ராஜா  அவர்களையும், அவரது நண்பர்களையும்வ  ரவழைத்து, விழாவைச்  சிறப்பித்த  பெருமை, நண்பர்  அ.கௌதமனையேச்  சாரும்.
                தொடர்ந்து, சேலம்மாநகரில்அக்டோபர் 9, 2011  அன்று  கவிதாயினி  திருமதி சுமதி அவர்கள் ஏற்பாடுசெய்த குறுஞ்செய்திக் கவிஞர்களின்  சந்திப்பிலும் கலந்துகொண்டு சிறப்பித்து, இளங்கவிஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த கவிஞர் அ. கௌதமன் அவர்களுக்கு அனைவரும் நன்றியுடையவர்களாவோம்.

- கிரிஜாமணாளன்