உலக இளைஞர்தினம் - 2015
இளைஞர்களின்கரங்களில்தான்இந்நாட்டின்எதிர்காலம்இருக்கிறதுஎன்பதை நன்கு உணர்ந்து, அவர்களுக்கு எழுச்சி யூட்டிய வீரத்துறவி விவேகானந்தரையும், இளைஞர்களைக் கனவுகாண ஊக்குவித்து, தேசநலன் சார்ந்த அவர்களின் எதிர்காலத்தைச் செம்மைப்படுத்த அயராது பாடுபட்ட அமரர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களையும் இந்த 'உலக இளைஞர் தின'த்தில் நினைவுகூர்வோம்!

- கிரிஜாமணாளன்
==========================
உலக இளைஞர் தினம்
====================
பிறந்தபின் தவழ்ந்து
தத்தித் தத்தி நடந்து,
மழலைபேசி, உறவுகளை
மகிழவைத்தாய்!
பயிலும்போது.
கற்றவர் சபையில்
கைதட்டல் வாங்கி,
பாடசாலைக்குப் பெருமை தந்தாய்!
நாளை
அகிலம் போற்றும் சாதனைபுரிய
ஓடிவா இளைஞனே!
இந்த
உலக இளைஞர் தினத்தில்
உறுதியுடன்!
-
கங்கை கணேசன், மதுரை
==========================
மாணவனாய் இருந்தாலும்
சாதாரண
மனிதனாய் இருந்தாலும்
உன்னை உனக்குள் புதைக்கும்
மதுவிலும்
மாதுவிலும்
மயங்கிவிடாதே!
மதி மயங்கினால்
மனிதமும் மங்கிவிடும்!
மண்ணுக்குள் போகும்வரை
மண்ணின் மைந்தனாய்
எதையுமே சாதிக்க முடியாது!
நீ
சாதிக்க நினைப்பவனா?
சரித்திரம் படைக்க நினைப்பவனா?
உலகம் உன்னைத்
திரும்பிப் பார்க்க வேண்டுமென்ற
உந்துதல் கொண்டவனாய்
உலக உருண்டையை உன்
கண்முன் வைத்து
உருளவிட்டுப் பார்!
உலகத்தையே கைக்குள் வைத்தவர்கள்
உனக்கு முன் வருவார்கள்!
அவர்களை அசைபோடு!
நீ அவர்களாவாய்!
அவர்களில் ஒருவராய்
நீ ஆவாய்!
- கவி. மூர்த்திதாசன், தேனி, தமிழ்நாடு
=============================
எழுவாய் இளைஞனே!
வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்!
விழி விழி, உன்விழி நெருப்பு விழி! –உன் விழிமுன் சூரியன் சின்னப்பொறி!
கிழக்குத் தானாய் வெளுக்காது - அதைக்
கிழிக்காவிட்டால் சிவக்காது!
விரக்தி என்னும் சிலந்தி வலைக்குள்
வேங்கைப் புலி நீ தூங்குவதா?
எழு எழு தோழா, உன் எழுச்சி - இனி
இயற்கை மடியில் பெரும்புரட்சி!
உழைக்க வேண்டிய விரலிடுக்கில்
ஒட்டடை படிய விடலாமா?
முப்பதைத் தொடுமுன் மூப்புத்தொட - உன்
மூச்சில் முதுமை வரலாமா?
தப்புகள் வந்து தங்கிட - உன்
தசையின் முகவரி தரலாமா?
-
கவிஞாயிறு தாராபாரதி
==============================
உலகமே உமதுதான்!
இளைஞர்களே!
உம்மால் முடியும்!
உணர்ந்து கொள்ளுங்கள்!
கொஞ்சம்
நிமிர்ந்து நில்லுங்கள்!
இவ்வுலகத்தை அழகாய்
வெல்லுங்கள்!
தோல்வியை எதிர்கொள்ளுங்கள்!
நீங்கள் வளரும் நாற்று,
அதை
இவ்வுலகுக்குக் காட்டுங்கள்!
உலகமே உமதுதான்
அதைப்
புரிந்துகொள்ளுங்கள்!
-
ஜமீலாபேகம், உதகை, தமிழ்நாடு
================================
இளைஞனே!
உன்னை ஈன்ற
உத்தம அன்னையாய்,
தாய் மண்ணைப் போற்றி
மனக்கோவிலில் அமர்த்து!
தன்னைக் காக்க
தளராது உழைத்த
தலைமகன்களின் வரிசையில்
உன்னையும் உயர்த்தும்
இந்த
உத்தம தேசம்!
வந்தேமாதரம்!
-
ஈரோடு எஸ். வளர்மதி
=================================
=================================
=================================
எம் இளைஞன்!
எண்ணற்ற இரவை விரட்டும்
வெளிச்சங்களாய்
எம் மண்ணில் ஒளிர்ந்தான்
எம் இளைஞன்!
பனிகொட்டும் பர்வதத்தில்
பாதுகாப்புப் படையில்
எம் இளைஞன்!
நான்கு சுவர்களுக்குள்
நாளைய வாழ்வினை உருவாக்கும்
நல்லாசிரியனாய்
எம் இளைஞன்!
விக்னத்தைப் பிரசவித்த
விஞ்ஞானியாய்
எம் இளைஞன்!
மெய்யானதைப் போதிக்கும்
விவேகானந்தராய்
எம் இளைஞன்!
கோவணம் உடுத்தி
கலப்பைப் பிடித்து
பசியோட்டுபவனாக
எம் இளைஞன்!
துவைத்துத் துவைத்து ரேகையைத்
தொலைத்த
சலவையாளனாய்
எம் இளைஞன்!
திரியாகக் கருகி
திக்கெட்டும் வெளிச்சமாகி
தரணியைக் காக்கிறான்
எம் இளைஞன்!
- பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு.
=============================
இளைஞனே!
வன்முறையே வேண்டுமென்று விரும்பி நிற்போர்
வழி தவறிச் செல்வதுதான் உண்மையாகும்!
முன்னோர்கள் இருந்திட்ட கற்காலத்தின்
மூடராக நாம் மாறல் உறுதியாகும்!
பின்னவர்க்கு நம் வழிகாட்டுதல்தான்
பீடுடைய நமக்கின்று பெருமையாகும்!
நன்முறையைக் கைக்கொண்டு நாமெல்லோரும்
நாட்டிலுள்ளவன் முறையை விரட்டுவோமே!
- பாச்சுடர். வளவ. துரையன்
(நன்றி: 'தமிழ்த்தாராமதி')
==============================
எழுச்சி கொள்க!
தியாகம் பல தீட்டி வரையப்பட்ட
அழகான ஓவியமாய்
'சுதந்திரதேவி ' நான்,
கள்வர்கள் கையால் கலையலாமோ
இளைஞர்களே?
எழுச்சி கொள்ளுங்கள்,
என்னைக் காப்பாற்ற!
-
பத்மாவதி கிருஷ்ணசாமி, நன்னிலம்
தமிழ்நாடு
==============================
நீ இளைஞனா?
இளமை
இயற்கையின் வரம்!
இந்த வரமும்
சிலருக்கு மட்டுமே
வசந்தங்களை வழங்குகிறது.
இளமையின் மதமதப்பில்
ஏற்படும் இறுமாப்பில்
இலட்சியங்களை
அலட்சியப்படுத்தி
மாயச் சுகங்களில்
மயங்கிக் கிடந்து
வருடங்களை உருட்டியபின்…..
வருகிறது முதுமை!
கூடவே….
வேதனை, விரக்தி,
கொஞ்சம் ஞானம்.
திரும்பி வராத இளமை,
வசந்த முல்லையின் வாசம்,
விரும்பாமல் வரும் முதுமை,
கசந்த வாழ்வின் மிச்சம்.
நீ இளைஞனா?
* * * * *
வாழ்க்கை ஒரு
ஓட்டப் பந்தயம்.
நீ விரும்பாத போதும்
ஓடவேண்டிய
வினோத பந்தயம்!
வெல்வதென்றால்
வேகமும் வேண்டும்,
வீழாதிருக்கும்
விழிப்புணர்வும் வேண்டும்,
விழுகின்ற போதெல்லாம்
எழுகின்ற வீம்பும் வேண்டும்!
-
தங்கவேலு மாரிமுத்து, திருச்சி
===========================
இளைய தலைமுறையே!
கலையாத கனாக்காணும்
இளைய தலைமுறையே!
பலியாடாய் மாறாமால்
பகைவெல்லப் படைநடத்து!
பல்லக்குத் தூக்கியே,
பலத்தை இழக்காதே!
இதய ஊற்றினிலே
எழுச்சி பொங்கினால்
இமயச் சிகரங்கள்
இருக்கும் உன்மடியில்!
புல்லாய் இருந்தால்
சிதைப்பார்கள்!
பொம்மை என்றாலோ
உதைப்பார்கள்!
புழுவாய்க் கிடந்தால்
மிதிப்பார்கள்!
புயலாய்க் கிளம்பு
துதிப்பார்கள்!
-
வல்லம் தாஜுபால் (தஞ்சைதாமு)
=============================
இளைஞனே!
இளைஞனே! நீ,
அனைவரிடமும்
அன்பும், நட்பும்
சகோதரத்துவமும்,
நாளும் வளர்த்தால்,
போற்றப் படுவாய் நீ,
புகழோடு இச்சமூகத்தில்!
பச்சைத்து ரோகமும்,
பகைமையும் நீக்க,
நிச்சயம் எதிர்காலம்
நிலைக்கும் நலமாய் உனக்கு!
-
புஷ்பவனம், வைரநகர் சிவாஜி,
=========================
வீழ்ந்தாலும்
வீறுகொண்டு எழு
விதையென!
தாழ்ந்தாலும்
தலைநிமிர்ந்திடு
நாணலென!
நாளை விடியல்
உனதாகும்!
-
கார்த்திகேயன், வெள்ளக்கோவில்.
================================================
எழுவாய் இளந்தமிழா!
உன்னை இகழ்ந்தோர் உறக்கம் இழந்துழல
இன்னே எழுவாய் இளந்தமிழா - பொன்னாய்,
ஒளிரும் தமிழின் உரிமை நீ காப்பாய்
களிறுபோல் தோன்றிக்களத்து.
-
புலவர்மு.செல்வராசு, திருச்சி
===========================
2005, நவம்.15,"நற்றமிழ்" இலக்கியத் திங்களிதழிலிருந்து எடுக்கப்பட்ட கவிதைகள்:
இளைஞனே!
உடுத்தலும் உறங்கலும் உண்ணலுமே
எடுத்ததின் பயனென எண்ணாமல்
அடுத்தினி அவனியில் வாழ்ந்தோங்கத்
தொடுத்திடு புதுப்பணி துவளாமல்!
-
து.சுப்பராயலு, பெரியகுளம்
=============================
இளைஞனே!
விதியினைஎதிர்த்துநீபோராட
மதியதேதுணையெனஅறிவாயே!
மதியுடன்தொடர்ந்துநீமுயன்றாலே
விதியதுபுறமுதுகுகிட்டிடுமே!
-
பா.கல்பனா, பழையகருவாட்சி
=============================
இளைஞனே!
வெறிக்குணம்தவிர்த்து
வெற்றிகாண்பாய்!
புறஞ்சொல் அழித்திடு
புனிதனாவாய்!
நிறைமனம் உயர்த்திடு
இனியனாவாய்!
அறச்சுமை வளர்த்திடு
மனிதனாவாய்!
-
ப. தேவகுரு, தேவதானப்பட்டி
==============================
இளைஞனே!
துடிப்புடன் நடப்பதால் துன்பமில்லை!
கடிந்திடும் சினம்விட எதிரியில்லை!
படி! படி! எழுதிடு பயமில்லை!
படிப்படி உயர்வுதான் அதன்எல்லை!
- ஆ. முகிலரசி, ஆற்காடு
==============================
இளைஞனே!
தளர்வுறும் மனத்தினைக் கிளர்த்திடுவாய்!
வளர்பிறை எனப் புகழ் வளர்த்திடுவாய்!
உளத்தினில் உயர்வையே ஊன்றிடுவாய்!
களமெலாம் களிறென வென்றிடுவாய்!
-
திருமதி கற்பகம், பரதராமி
===============================
No comments:
Post a Comment