Wednesday, June 22, 2016

தஞ்சை மண்ணில், ஒரத்தநாட்டில் பிறந்த கவிஞர் புகாரி அவர்கள் எனது நீண்டகால நண்பர். அரபு நாட்டில் பணியாற்றி, தற்போது கனடாவில் கணினி வல்லுநராகப் பணி. 'அன்புடன்' என்னும் புகழ்பெற்ற இணைய தளத்தை நடத்திவரும் இவரால் இணையதள படைப்பாளராக உருவாகிய எண்ணற்ற படைப்பாளர்களில் நானும் ஒருவன்.
            'வெளிச்ச அழைப்புகள்', 'அன்புடன் இதயம்', சரணமென்றேன்','பச்சை மிளகாய் இளவரசி' மற்றும் 'காதலிக்கிறேன் உன்னை எப்போதும்...' ஆகியவை இவரது கவிதைத் தொகுதிகள்.
            தன் புதிய நூலை வெளியிடும்போது அதை தமிழகத்திற்கு வந்து வெளியிடும் வழக்கத்தைக் கொண்டுள்ள இவரின் தாய்நாட்டுப் பற்றை போற்றாதவரே இல்லை!
            நான் செயலாளராக உள்ள எங்கள் 'உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக் கிளையின் சார்பில் இவருக்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் எண்ணற்ற இணையதள படைப்பாளர் தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தது எங்களால் மறக்கவியலாது!

- கிரிஜா மணாளன்       





கண்ணீரில்  விழுந்த  இதயம்!

நெஞ்சு நிறைய
கண்ணீரைக் கொட்டிவிட்டுச்
சென்றுவிட்டாய்!
மூச்சுவிட முடியாமல்
மூழ்கிக் கிடக்கிறது  இதயம்.

நீரில் விழும் எல்லாமும்
எடை இழக்கும் என்பார்கள்
உன் கண்ணீரில் விழுந்த
என் இதயம் மட்டுமே
கனமாய்க் கனக்கிறது!
==============================================
நீயே என் காதலி!

உன்
உள்ளத்தைத் தொடவரும்
ஒவ்வொரு  முறையுமே
உன்
பாதங்களைத்  தொடமுடியாத
பாவப்பட்ட அலைகளாய்
நான் திருப்பி  அனுப்பப்படுகிறேன்
எனினும்
என் காதலை  நிராகரிக்கும்
நீயே என் காதலி!
=============================================
- கவிஞர்  புகாரி, கனடா
('காதலிக்கிறேன் உன்னை எப்போதும்...' தொகுப்பில்)



No comments: