Sunday, August 23, 2015

மனிதநேயம்!

இதயத்திலிருந்து  இறக்கிவிடாதீர்கள்
மனிதநேயத்தை!
உதயமாகட்டும் மனிதநேயம்
உலகமெங்கும்!
சகல தேசங்களும்
சகல சமூகங்களும்
சமத்துவம் காண
தழைக்கட்டும்
மனிதநேயம்!

====================================
====================================

பேரழிவு மூட்டும் பெரும்போர்களையும்
சீரழிவு விளைக்கும் சமூக அவலங்களையும்
பாரிலிருந்து விரட்டப் பயன்படுவது
வேறொன்றுமில்லை,
மனிதநேயமே!

- கிரிஜா மணாளன், திருச்சி, தமிழ்நாடு
 ==============================
==============================

உண்ணுதற்கு மட்டுமல்ல
உதவுவதற்கும்தான் கரங்கள்!
தன்னலம் கருதாமல்
தவிப்போர்க்கு உதவிசெய்ய
எண்ணினாலே மலரும்
எல்லோர் மனதிலும் மனிதநேயம்!

- எஸ்.வளர்மதி, ஈரோடு
==============================
==============================


மனிதநேய மகத்துவத்தை
மக்கள் நாம் மறந்தால்,
புனிதர் காந்தி கொள்கையைப்
புறக்கணித்தவர் ஆவோம்!

இனியொரு விதி செய்வோம்
இந்நாட்டின் ஒற்றுமைக்கு
தனிமனிதன்  ஒவ்வொருவரும்
தழைக்க வைப்போம் மனிதநேயத்தை!

- மங்களம் மைந்தன், திருச்சி
தமிழ்நாடு
 =====================================
======================================
கடும்நோயின்
வேதனை  முழுதும் மறைந்தது
மருத்துவரின் மனிதநேயமிக்க
வாய் வார்த்தையில்.

- கங்கை கணேசன், மதுரை
===============================
===============================

மனிதநேயம் உயிரோடிருக்கிறது,
மது அருந்தும் மேஜையின்முன்!
மனிதநேயம்  செத்துவிட்டது,
மனைக்கு வந்த மனைவியின்முன்!

- கவிஞர். டாக்டர், பி.எஸ்.சன்னாசி
தேனி, தமிழ்நாடு

===============================
=====================================
"மனிதநேயம்"

நாடுகளையும் மொழிகளையும்
தாண்டிய நட்பு,
மதங்களையும் இனங்களையும்
தாண்டிய மனம்,
அதுவே...
மனிதகுலம் தழைப்பதற்கான
மனிதநேயம்!
==========================
==========================
சாதிக் கலவரத்தில்
மனிதர்கள் சாகும்முன்னே
அவர்களுக்குள் செத்துப்போனது
'மனிதநேயம்'.
==========================
==========================
சிறுகச் சிறுக அரித்துப்போகிறது
சுயநல செல்கள்
மனிதனுள் வளர்ந்த
மனிதநேயம்
முழுவதும் அரித்துவிட்டால்
நாளை மிஞ்சுவது
வெற்றுடல் மட்டுமே!

==========================
==========================
 சாலையில் எதிரே ஒருவன்
இரத்தவெள்ளத்தில் துடிக்கும்போது
கண்களை மூடிக்கொண்டு
சுயநலமாய்ப் பயணம் தொடரும்
மனிதர்களிடையே மரித்துப்போனது
'மனிதநேயம்'!.
==========================
==========================
போதை வஸ்துவை
உடலில் புகுத்தி
பெண்களின் கற்பை
கரன்ஸியில் பறிக்கும்
கயவர்களிடம்
கசங்கியே காயப்பட்டுக்
காணாமற்போனது
"மனிதநேயம்'!
=========================
=========================
 தன் இனத்தைத்
தானே அழிக்கும் அவலம்,
நேயம் மறந்த நரகர்களால்,
வெடித்த தீவிரவாதத்தால்
சிதறியேபோனது "மனிதநேயம்"!
தின்று துப்பிய கரும்புகூட
எறும்புக்குச் சிறு பசியாற்றும்
மாளிகையில் வாழ்ந்தாலும்
மனிதநேயம் மறந்த மனிதர்களால்
வேதனைப்படும் சிறு எறும்பும்.

==========================
==========================

மனிதம்!

கசங்கிப்போகும் வார்த்தைக் காயங்களால்
களிப்பற்ற மனம் சில சமயம்!
சுயநல சுனாமியில் சிக்கிச்
சிதறும் மனம் சில சமயம்
விலங்காய் மாறி வெறிக்கோலமிட்டு
வேட்டையாடும் மனம் சில சமயம்
புலப்படாத பொழுதுகளில்
பொங்கிவரும் கண்ணீரில்
புலம்பும் மனம் சில சமயம்
விழி விளக்கில்லாதொரு இருளில் 
சிக்கித்தவிக்கும் மனம் சில சமயம்
இன்னும் இன்னும்
இப்படியான பல சமயங்களைத்
தாண்டித்தான்
எப்போதாவது பூக்கிறது
நம்மில் மனிதம்!

கவிதாயினி  கொட்டக்குளம்  ரம்யா
தமிழ்நாடு.

==============================

========================= =====

மனிதநேயம் கொள்வோம் !
----------------------------------------
போற்றுதலுக்குரிய  தன்னம்பிக்கை,
புரிதலோடு கூடிய வாழ்க்கை,
தேற்றிக்கொள்ளும்  மனத்தெளிவு,
தீர்க்கமான  குறிக்கோள்கள்,
ஆற்றிவரும்  அரிய சாதனைகள்,
அத்தனையும்  தம்முள்கொண்ட.....
மாற்றுத்திறனாளிகளால்தான் இந்த
மனிதகுலமே வாழ்கிறது!
மனிதநேயம்  கொள்வோம்
மாற்றுத்திறனாளி  தோழர்கள்மீது!

-         கிரிஜா மணாளன், திருச்சி. (தமிழ்நாடு)
 ===============================

மனிதநேயம்!

விடியும்போதெல்லாம்
முடியாவிட்டாலும்,
முடியும்போதெல்லாம்
விடியட்டும்
நமக்குள்  இருக்கும்
மனிதநேயம்!

(ரா. பார்த்திபன், திரைப்பட நடிகர்/இயக்குநர்)


- கங்கை  கணேசன், மதுரை
==================================
==================================

மனிதநேயம்  வளர்ப்போம்!

மதக்கலவரத்தை  மற்றவனா
கொண்டுவந்தான்?
இந்த மண்ணின்  மைந்தர் தானே!

வரதட்சணைக்   கொடுமையை
வந்தவனா  கொண்டுவந்தான்?
இங்கு  வளர்ந்தவன்தானே!

அரசியல்  ஊழல்களை
அந்நியனா   கற்றுத்தந்தான்?
உள்ளூர்க்காரன் தானே!

அராஜகத்தைக் கொண்டுவந்தது
அந்நியனா?
அயலான் தானே!

கள்ளச்சாராயத்தைக் 
கடல் கடந்தா  கொண்டுவந்தான்?
கயவர்கள் கூட்டம்
உள்ளூரில்தானே?

கொலையும்  களவும் கூடுதலாகி,
கொள்ளையர்  கூட்டமும் மிகுதியாகி
குற்றங்கள்  விளைவதெல்லாம்
நம் நாட்டில்தானே?

இளைஞனே!
மீண்டும்  முயற்சி செய்,
மனிதநேயத்தைத்  தேட!

மூளையிருந்தும்  ஏன்
மூலையில்
முடங்கிக்  கிடக்கிறாய்?
விண்ணைத் தொடும் கரங்களைக்
கன்னத்தில்  வைத்துக்கொண்டு
காலத்தை  ஏன்  கரைக்கிறாய்?

அலைகடல்  தந்த  முத்து,
அன்னை  பாரத்ததின்  சொத்து,
மனிதநேயத்தின்  வித்து,
மாமனிதர்   கலாமைப்  பின்பற்றி
களைகளை  நீக்கிக்
காப்போம்  மனிதநேயத்தை!
வளரட்டும்  மனிதநேயம்  எங்கும்
வளமாக!

- கவிதாயினி. யோகேசுவரிஉதகை, தமிழ்நாடு
=============================================
=============================================

                குற்றவாளியையும்  மனித நேயத் துடன்  நடத்துவது  தவறில்லை
ஆனால்மனிதநேயத்தை   மதிக்காமல்கொலை, கொள்ளை, கற்பழிப்பு  
எனக் குற்றம்  செய்தவன்  மனித  இனத்திலேயே  சேர்த்தியில்லாதவன்.
                அவனுக்கு, மனித நேயம் மட்டுமல்லமனிதவுரிமைச்  
சட்டமும்  மறுக்கப்பட்டுகடும்  தண்டனை  அளிக்க வேண்டும்!

- கங்கை  கணேசன், மதுரை.

===============================




























































No comments: