Tuesday, August 25, 2015

அன்னை  தெரசா
==============-=================
(August 26, 1910  --  Septenber 5,1997) 










எளிமை  அன்போடு அறிவாற்றல் என
எல்லாமே பெற்ற அன்னை !
இனிமையாய்ப் பழகும் நேர்த்தியால்
இன்றும்
உலகே நினைக்கிறது உன்னை!


- கிரிஜாமணாளன், திருச்சி, தமிழ்நாடு
========================================

தன்னைப் பெற்றெடுக்காதப்பல
பெற்றோர்களுக்குப்
பிள்ளையானவர்!
தான் பெற்றெடுக்காதப் பல
பிள்ளைகளுக்குத்
தாயானவர்!
எந்த  மருத்துவனும்  கண்டு
முகம்  சுளிக்கும்
நோயாளிகளை
முத்தமிட்டு மருத்துவம் செய்த
முதல்  மருத்துவர்!

- மூர்த்திதாசன், தேனி, தமிழ்நாடு.
=========================

கோலூன்றும்  வயதிலும்  அன்னை
கொள்கை  தவறவில்லை! - இலட்சியக்
காலூன்றி  நடந்த அவரும்
கருத்தினில்  மாறவில்லை!
ஆலூன்றி  வளர்தல்போல்
அனைவரின்  நெஞ்சில்  நின்று
நூல்போற்றும்  மனிதநேயம்
நுகர்ந்தவராம் நமது  அன்னை!

- கிரிஜாமணாளன், திருச்சி,  தமிழ்நாடு
============================

இந்தியம்  செய்த  புண்ணியம்  அவரை
இங்கே  அழைத்து  வந்தது!
அயலகத்தில்  அவதரித்தாலும்,
உந்திடும்  மனிதநேயம்
உள்ளத்தில்  பெற்றவராய் - மக்கள்
சிந்திடும்  கண்ணீரைத்  துடைக்க
சீர்மிகு  சேவையாற்றி
இந்திய  மக்களின்
இதயத்  துடிப்பாய்  அவர்!

- எஸ்.வளர்மதி, ஈரோடு, தமிழ்நாடு
================================

 







கர்ணனைக்  கண்டதில்லை
நம்பியதுண்டுஅவரின்
வள்ளல்  தன்மையை
எண்ணியதுண்டு
கொடையில்  அவரை  மிஞ்ச
எவருமில்லை  என்று!
அந்தக்  கர்ணனே
கையேந்துவான்
அன்பையும்  சேர்த்துக்
கொடையளித்த
அன்னை  உங்களிடம்!
மண்ணில்
மனிதநேயம்  வளர்க்க,
அன்னையே, உங்கள்  பிறந்தநாளில்
விண்ணை  நோக்கி  உங்களை  வணங்கி
விரதம்  பூண்டு
உறுதிகொள்கிறோம்  நாங்கள்!

- கங்கை  கணேசன், மதுரை
==============================

அன்பும்அரவணைப்பும்
அளவற்ற  சகிப்புத்தன்மையும்
தன்னுள்ளே கொண்டு
தடம்பதித்தாய்  வரலாற்றில்!

கல்விநிதிக்காக
கையேந்தி  நின்றபோது,
காரி  உமிழ்ந்தவனையும்
கருணையுடன்  மன்னித்த
காரிகைநீ!
உன்னுள்  மலர்ந்த  மனிதநேயம்
உலகமெங்கும்  பரவட்டும்!

- பத்மாவதி  கிருஷ்ணசாமி,  நன்னிலம்
தமிழ்நாடு.
============================

மண்ணில்வந்தவெண்ணிலாநீ!
எண்ணிடப்பெருமைதரும்
அன்னையாய்ச்சேவைபுரியும்
பெண்ணிலாநீ!

@            @            @

கோடியில்ஒருத்திநீ!
கோபுரக்கலசம்நீ!

@            @            @

அன்புச்சிறைக்கைதி!
பண்புநிறைதாதி!
உன்னில்இரக்கம்பாதி!
தன்னில்ஈவுமீதி!

@            @            @

நோபல்பரிசுபெற்ற
நோபிள்லேடி
கருணையின்ஐடி (    )

@            @            @

மானுடச்சேவையே
தான்கொண்டநோன்பாய்
ஊனுடல்வருத்தி
உன்னதச்சேவைபுரிந்த
அன்னையேதெரசா!


- கவிதாயினி   வஞ்சி, நெல்லை
தமிழ்நாடு

=========================
நான்புனிதமானேன்!
================
கருவாயில்  உயிர்த்துளிகளைச்
சுமக்காமல்
சுமந்தாய்  பல பிள்ளைகளை,
உன் இதயக்  கருவறையில்!
கம்பன் பாவம் செய்தவன் ஆனான்,
கனிவின் சிகரம் உன்னைப்பற்றி
எழுதாமல் போனதால்!
நான் புனிதம் ஆனேன் - இங்கே,
உன்னைப்  பற்றி  எழுதியதால்!

- பாரதி  பாக்கியம், தேனி
தமிழ்நாடு.
=============================
எந்தன் எழுதுகோல்
அகம் மகிழ்ந்தது
அன்னை  உன்னைப் பற்றி
எழுதுவதால்!
அன்னிய தேசத்தில் மலர்ந்தாய்
மல்லிகையாக!
மணம்பரப்பி வலம் வந்தாய்
அகிலமெங்கும்!
செந்தாழம்பூவே1
செல்வச் செழிப்பில் வளர்ந்தாலும்
சேரவில்லை  உன்னிடத்தில்
செருக்கு!
புல்லுருவிகள்  செய்த  தவறினால்
உண்டான காயங்களுக்காக
மருந்தானாய்!
எச்சில்  துளிகளையும்
எந்திச்  சிரித்தாய்! - உன்
செங்காந்தள் விரல்களில்!
ஐம்பூதங்களும் நீதான் என்பேன் நான்!
நிலமாய் இருந்து
பாதங்கள் பல தாங்கினாய்!
நிராய் இருந்து
தாகங்கள்மாற்றினாய்!
ஒளியாய்இருந்து
இருள் அகற்றினாய்!
காற்றாய்  வந்து
புல்லாங்குழல்  தந்தாய்!
ஆகாயமாய் வந்து
அகிலம்  முழுவதிற்கும்
அன்னையானாய்!
- பாரதி  பாக்கியம், தேனி
தமிழ்நாடு.
 ==============================
 






கருணையில்  கங்கை  நீ!
====================

பதின்மப்  பருவத்திலே
இளமை  உருவத்திலே
இரக்க  உள்ளத்திலே
இனிய  குணத்திலே
நிறைபெண்ணாய்
துறவு பூண்டாய்!

உள்ளமும் வெள்ளை,
உடையும் வெள்ளை!
மனித மனங்களைக்
கொள்ளை கொண்ட
பிள்ளை!

தொழுநோயாளி  தழுவி
விழிநீர்த்  துடைத்த
தயைப் பூங்கா நீ!
கருணைக் கங்கா நீ!

- கவிதாயினி  வஞ்சி, நெல்லை
தமிழ்நாடு
=============================
அன்பின்  பெருங்கடல்!
===================
ஏழையின்  வீட்டில்
இருளை  விலக்கி
வெளிச்ச  விளக்கை
ஏற்றவந்த அருளொளி!

காவியத்தின்  சரித்திரம்!
நிதானத்தின்  நிலைக்கோல்!
அன்பின் பெருங்கடல்!
தானத்தில் பெருவள்ளல்!
இரக்கத்தின்  இருப்பிடமே
அன்னை தெரசா!

- வைரநகர்  சிவாஜி,
புஷ்பவனம்,  தமிழ்நாடு
============================











No comments: