அன்புடையீர், வணக்கம்.
“உலக மகளிர் தினத்தை மகிழ்வுடன் கொண்டாடும் அனைத்துலக மகளிருக்கும்,
எங்கள் ‘தமிழ்நாடு அலைபேசிக் குறுஞ்செய்திக் கவிதைக் குழும’ (Mobile SMS
Poets of Tamilnadu) த்தின் கவிஞர்கள் சார்பில் எனது நல்வாழ்த்துக்கள்!
‘’மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!” என்று
மகளிர் குலத்தைப்போற்றிய அந்த மகாகவியின் எண்ணப்படி, இன்று அகில உலகிலும்
தங்களை அனைத்துத் துறைகளிலும் நிலைநிறுத்திக்கொண்டு சிறப்பினைப்
பெற்றுவரும் மகளிர்தம் சிறப்பைப் போற்றும் வண்ணம் எங்கள் கவிஞர்கள்
உருவாக்கிய சில கவிதைகளை நமது ‘அன்புடன்’ குழுமத்தில் www.groups.google.co./group/anbudan)உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.
உங்கள் பின்னூட்டங்களும், பாராட்டும், விமரிசனங்களும் இக்கவிஞர்களை
மேன்மேலும் ஊக்குவித்து அவர்களைக் கவிதையுலகில் காலூன்றச்செய்யும் என்ற
நம்பிக்கையுடன்.....
உங்கள்,
கிரிஜா மணாளன்
=========================================================
தன்னம்பிக்கை கொள்!
------------------------------
கண்ணீர் விட்டது போதும்,
கண்களைத் துடைத்திடு பெண்ணே!
உன் பாதம் போகும் வழி மறந்து,
நல்பாதை போகும் வழி தேடு!
இலையுதிர் காலம்தான் இது உனக்கு,
அதற்காக
இழந்துவிடாதே நம்பிக்கையை!
சமுதாயமே சகாராவானாலும்,
உன் நம்பிக்கை ஒரு நைல்நதி ஊற்று!
வசந்தகாலம் வெகுதொலைவில் இல்லை!
வரப்போகும் காலம் உன்
வாழ்க்கையின் வசந்தம்!
தளர்ச்சி கொள்ளாதே,
தன்னம்பிக்கை நீ கொண்டால்,
சுற்றும் பூமியையும்
சற்று நிறுத்தலாம்!
- முனைவர் ஜோதி கார்த்திக், திருச்சி
(தமிழ்நாடு)
-------------------------------------------------------------------
வலிகளே உனது வலிமை!
====================
வலிகளே உனது வலிமை - பெண்ணே
வருந்தாதே இது உனது உடைமை!
வானுறை தெய்வத்தின் மேலாய் - பெண்ணை
வாழ்த்துகின்ற காரணத்தினாலே!
கன்னிப் பருவமதை எய்திடும்போதும்
காதலுடன் காளையவனைக் கூடும்போதும்
பத்துமாதப் பந்தமொன்றைப் பெறும்போதும்
பாலையுண்ணும் சிசுமார்பி லுதைக்கும்போதும்
வலிகளே உனது வலிமை!
உற்றார் உறவினர் உயர்வுக்கும்
உனைச்சார்ந்த உறவுகளின் மேன்மைக்கும்
உள்ளமிரங்கி நீ யாற்றூம் பணிகள்தன்னில்
உடல்வருத்தி யுழைப்பதினால் தோன்றுகிற
வலிகளே உனது வலிமை!
ஏற்றம்பிடித்து நீரை நீ இறைக்கும்போதும்
நாற்றாங்காலில் நடவதனைச் செய்யுபோதும்
விளையும் பயிர் வீடுவந்து சேரும்வரை
வெயில்பனி உளைச்சலினால் விளைகின்ற
வலிகளே உனது வலிமை!
வலியின் விளைவு வசந்தமெனில் - அந்த
வசந்தத்தின் வரவு நிலைக்குமெனில்
வலிகளே உனது உடன்பிறப்பு - அதை
வரவேற்பதே உனது தனிச்சிறப்பு!
- தனலட்சுமி பாஸ்கரன், திருச்சி.
(தமிழ்நாடு)
=======================================
ஒதுக்கீடு!
========
ஒதுக்கீடு கேட்டு ஓயாமல் போராடியும்
ஒதுக்கப்பட வேண்டியவை எங்களுக்கு
ஒதுக்கப்படவில்லை.....
ஆனால்......
ஒன்றுமே போராடாமல்
ஒதுக்கிவிடுகிறார்கள் எங்கள் மாமியார்கள்
எங்களையே.......
அவர்கள் இதயத்திலிருந்து!
- சி. கலைவாணி, வேலூர்
(தமிழ்நாடு)
================================================
அடிமை!
=========
யாருக்குக் கேட்கும்
எங்கள் இதயத்தின் நாதம்?
எப்போது உருகிப் பாடும்
எங்கள் சுதந்திர கீதம்?
எனக்குள் செய்கிறேன்
புதுமைப் பெண்ணென்ற விவாதம்.,
நாங்கள் அடிமை என்பதுதானா
எங்கள் வாழ்வின் வேதம்?
பெண்ணுரிமை என்பதெல்லாம் உங்கள்
பேச்சளவில்தானா?
மண்ணுக்குள் போகும்முன்பே அதை
மனமாரக் காண்போமா?
- தே. ரம்யா, திருவண்ணாமலை, (தமிழ்நாடு)
======================================
பெண்ணே நீ.........
-------------------------------------
பெண்ணே! உனக்கு எதிரி
மாமியாருமில்லை - போலி
சாமியாருமில்லை!
நீ, நீயேதான்!
உன்னைப் பிணைத்திருப்பது
இரும்பு விலங்கல்ல,
சின்ன நூல்தான்!
தொலைக்காட்சி ஊடகத்தின்
போலி சோகங்களில் உன்
நிஜமுகத்தைத் தொலைக்காதே!
உன் கழுத்து
தங்கநகைக்காக மட்டுமல்ல,
தங்க மெடல்களுக்காகவும் தான்!
- முத்து விஜயன், கல்பாக்கம், சென்னை
(தமிழ்நாடு)
---------------------------------------------------------------------
பாரதியின் வழியில்.......
--------------------------------------
தாய்க்குத் தலைமகளாய்
ஜென்மம் எடுத்த நாள்முதலாய்,
துணிந்தே நடக்கின்றேன்,
துன்பங்களையும் சகித்தபடி.
பதவியில் இருந்தபோது
பலர் போற்றும் உழைப்பாளியாய்,
கட்டிய கணவனின்
கருத்தறிந்த மனைவியாய்,
புரளி பேசுவோர்முன்
புலியாய், புரட்சிப் புயலாய்!
வீரம், விவேகம், தன்னம்பிக்கை
விதைகளை என்னுள்
விதைத்தது
‘பாரதி’யென்னும் உழவனின்
பார்போற்றும் கரங்கள்தான்!
- எஸ். சுமதி, சேலம்.
(தமிழ்நாடு)
-------------------------------------------------------------------
எழுச்சி கொள்வீர்!
--------------------------
பால்யத் திருமணமும்
பாலியல் குற்றங்களும் குறைந்தும்,
நீங்கிடவில்லை இன்னும்
பெண்ணடிமைக் கொடுமை!
நாகரிகப் போர்வையில்,
அங்கங்களைப் படமெடுத்து
ஆதாயச் சந்தையில் விற்கத்துணியும்
விஞ்ஞான விபரீத உலகமிதில்...
பெண்ணுரிமை பேசி
பொய்மையாய் வாழும் ஆண்களிடம்
அல்லல்பட்டு அடிபணியும்
அவலநிலையும் மாறவில்லை!
எழுச்சி கொண்டு சபதந்தன்னை,
எடுத்திடுவீர் இந்த மகளிர் நாளில்!
- ஹயத் பாஷா (JKK SMS Editor) சென்னை
(தமிழ்நாடு)
------------------------------------------------------------
புதுமைப்பெண்
===========
நிமிர்ந்த நடை
நேர்கொண்ட பார்வையோடு,
எத்தொழிலும் இன்று
முத்திரை பதித்து,
நித்தமும் புதுமலராய்.............
பாரதி கண்ட
புதுமைப் பெண்கள்!
- கொள்ளிடம் காமராஜ், (KKI SMS Editor) திருச்சி.
(தமிழ்நாடு)
====================================
எக்காலம்?
--------------
ஆண்டுதோறும் மகளிர்தினம்
கொண்டாடியும்
அகம் நிறையவில்லை எங்களுக்கு.
வேண்டுவன கேட்டும் கிடைக்கவில்லை,
எங்கள்
வேதனையை யாருமிங்கே
மதிப்பதில்லை!
யோசிக்கும் நிலையில் ஆள்வோர் இருக்க,
நாங்கள்
யாசிக்கும் நிலை மாறுவது
எக்காலம்?
- கிரிஜா நந்தகோபால், திருச்சி
(தமிழ்நாடு)
Wednesday, March 9, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment